பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் போலியா?ஆதாரத்தை காட்டுங்கள்…

பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் சவால் விடுத்துள்ளார். பெரியாருக்கு ஆதரவான 32 இயக்கங்களால் ஒன்று சேர்ந்து 300 பேரை கூட அழைத்து வர முடியவில்லை என்று கூறிய அவர், பெரியார் தொடர்பான பேச்சிற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் வெளியிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனை கண்டித்து அதிகமான இயக்கங்கள் இன்று சீமானின் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சீமான் வீட்டின் முன் 200க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கல்வி மாநில உரிமை என்று பேசும் திமுக, அத்தனை ஆண்டு காலம் கல்வியை மாநிலப் பட்டியலுக்குள் கொண்டு வராதது ஏன்? பெரியார் தொடர்பான பேச்சிற்கான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நான் ஆதாரத்தை உரிய நேரத்தில் வெளியிடுவேன். இதே கருத்தை இதற்கு முன் நிறைய பேர் பேசி இருக்கிறார்கள். அப்போது வராத கோபம், நான் பேசும் போது மட்டும் வந்திருக்கிறது. என் வீட்டிற்கு பதிலாக அருகில் உள்ள சலூன் கடையை தான் முற்றுகையிட்டுள்ளார்கள். பெரியாரை அதிகமாக விமர்சித்த கட்சி திமுக தான். நாங்கள் எதையும் ஆதாரமில்லாமல் பேசவில்லை. பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் போலி என்று சொல்கிறார்கள். அதற்கான ஆதாரத்தை காட்டுங்கள். 15 ஆண்டுகளாக இந்த புகைப்படம் பற்றி பேசாதவர்கள், இப்போது பேசுகிறார்கள். பெரியார் பேசியதை, எழுதியதை தான் நாங்கள் பேசுகிறோம். என் கட்சியை வழக்கு போட்டு முடிந்தால் தடுத்து நிறுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார்.