இந்தியா

மனித கழிவுகளை கையால் அகற்றும் பணியாளர் இல்லாத மாவட்டங்கள் 249 மட்டுமே : மத்திய அரசு பதில்

மொத்தமுள்ள 766 மாவட்டங்களில், 249 மாவட்டங்கள் மனித கழிவுகளை கையால் அகற்றும் பணியாளர் இல்லாத மாவட்டங்கள் என மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அளித்துள்ள பதில்: சாக்கடை சுத்தம் செய்யும்போது ஏற்படும் இறப்புகளுக்கான இழப்பீடு அதிகரிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு நீதிமன்றம், மத்திய மற்றும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. முந்தைய நிர்ணயிக்கப்பட்ட தொகை ரூ.10 லட்சம். 1993-ம் ஆண்டு முதல் இது பொருந்தும். அந்தத் தொகை தற்போது ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது சம்பந்தப்பட்ட முகமையால் செலுத்தப்பட வேண்டிய தொகையாக இருக்கும். அதாவது, ஒன்றியம், யூனியன் பிரதேசம் அல்லது மாநிலம் இத்தொகையை செலுத்த வேண்டும். அதாவது, சாக்கடை உயிரிழப்புகளுக்கு இப்போது ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இறந்தவரைச் சார்ந்து வாழந்தவருக்கு அத்தகைய தொகை வழங்கப்படாமல் இருந்தால் அத்தொகை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும், இது இனிமேல் இழப்பீடாக செலுத்தப்பட வேண்டிய தொகையாக இருக்கும்.

அதேபோல், சாக்கடை கால்வாயில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து இழப்பீடு வழங்கப்படும். இருப்பினும், குறைந்தபட்ச இழப்பீடு ரூ. 10 லட்சத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும். இயலாமை நிரந்தரமாக இருந்தால், பாதிக்கப்பட்டவரை பொருளாதார ரீதியாக உதவியற்றவராக மாற்றினால் இழப்பீடு ரூ. 20 லட்சத்திற்கு குறையாமல் இருக்கும். நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் இணங்குவதற்காக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் 20.10.2023 நாளிட்ட ஆணையின்படி, உயிரிழந்தவர்களின் 22 குடும்பங்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

கையால் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களை பணியமர்த்துதல் தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம் 2013-ன்படி, 06.12.2013 முதல் கையால் கழிவுகளை அகற்றும் பணி நாட்டில் தடை செய்யப்பட்ட தொழிலாக உள்ளது. மேற்கண்ட தேதியிலிருந்து எந்த ஒரு நபரோ அல்லது முகமையோ கையால் கழிவுகளை அகற்றும் பணியில் எந்த ஒரு நபரையும் பணியமர்த்தவோ அல்லது வேலை வாங்கவோ கூடாது. எம்.எஸ். சட்டம், 2013-ன் விதிமுறைகளை மீறி எந்தவொரு நபரையும் அல்லது முகமையையும் கையால் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தினால், அவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. ஒரு லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் கையால் கழிவுகளை அகற்றுவோர் மற்றும் சுகாதாரமற்ற கழிப்பறைகள் குறித்த விவரங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றைப் பதிவு செய்ய ஒரு கைபேசி செயலி மற்றும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 766 மாவட்டங்களில், 249 மாவட்டங்கள் கையால் மனித கழிவுகளை அகற்றும் பணியாளர் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு, இதற்கான சான்றிதழை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button