வக்பு வாரியம் சார்பில் பட்டப்படிப்பு பயிலவுள்ள மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கினார் முதலமைச்சர்..

வக்பு வாரியம் சார்பில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மற்றும் பயிலவுள்ள மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் பொருளாதார தடையினால் உயர்கல்வியினை தொடர இயலாத இஸ்லாமிய மாணவ மாணவியர்கள் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பினை தொடர கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, இஸ்லாமிய மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையினை வழங்கினார்.
இஸ்லாமிய பெருமக்களின் நல்வாழ்விற்காக தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் உலமாக்களுக்கு மாதம் ரூ.3,000/- ஓய்வூதியம், உலமா ஓய்வூதியதாரர் இறப்பின் அவரது வாரிசுதாருக்கு உலமா குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் பணிபுரியும் மாவட்ட காஜிகளுக்கு மாதம் ரூ.20,000/- மதிப்பூதியம் வழங்கப்படுவதோடு, 1 முதல் 8 –ஆம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவியர்களுக்கு ஒரு மாணவிக்கு ரூ.1,000/- வீதம் கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.