அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..

வேலூர், காட்பாடி, காந்தி நகரில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அமலாக்கத்துறை சோதனை நடக்கும் நிலையில், சிஆர்பிஎஃப் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். எம்பி கதிர் ஆனந்த் இல்லத்திலும், அவருக்கு சொந்தமான கல்லூரியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் 10 லட்சம் வருமான வரித்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று அதே காலக்கட்டத்தில் பூஞ்சோலை சீனிவாசன் தொழிற்சாலையில் இருந்து 11 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.இதுதொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளும் கணக்கில் காட்டப்படாத இந்த பணம் எங்கிருந்து வந்தது? என்பது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பதுக்கி வைக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதன் அடிப்படையில் தான் இன்று அமைச்சர் துரைமுருகன் மற்றும் பூஞ்சோலை சீனிவாசன் வீடு மற்றும் தொழிற்சாலையில் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அமைச்சர் துரைமுருகன் வீட்டில் காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
