அடுத்த மாதம் செம்மொழி பூங்கா.. விரைவில் பெரியார் நூலகம், ஸ்டேடியம்.. கோவையில் ஸ்டாலின் அப்டேட்!

கோவை அவினாசியில் உயர்மட்ட மேம்பாலத்தை திறந்து வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், அடுத்த மாதம் செம்மொழி பூங்கா திறந்து வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் விரைவில் பெரியார் நூலகம் மற்றும் கோவை கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகியவற்றையும் கட்டி முடித்து திறக்கப்படும் என்றும் உறுதி கொடுத்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் கோவையில் அடுத்தடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருவது பலரின் கவனத்தை திருப்பி இருக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலின் போது கோவையில் திமுகவால் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியவில்லை. அந்த அளவிற்கு அதிமுக மற்றும் பாஜக வலுவாக உள்ளது. இம்முறை குறைந்தபட்சம் 5 தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும் என்பதில் ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார். இதன் காரணமாக மற்ற மாவட்டங்களை விடவும் கோவைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக பார்க்கப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் திமுகவின் பல்வேறு முடிவுற்ற திட்டங்கள் திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.




