ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதி தேர்வு! பயனற்றது..பாமக ராமதாஸ் தாக்கு

ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக மாநிலத் தகுதித் தேர்வை நடத்துவது அபத்தம் என்பதால் பல்கலைக்கழகங்கள் மூலமாகவே நடத்த வேண்டும்! என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள் & கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான மாநிலத் தகுதித் தேர்வுகளை நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தகுதித் தேர்வை நடத்துவதற்கான எந்த திறனும், கட்டமைப்பும் இல்லாத ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்படுவது அபத்தம் ஆகும்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கான தகுதி பெறும் தேர்வை தேசிய அளவில் பல்கலைக்கழக மானியக் குழு நடத்தி வருகிறது.மாநில அளவில் இந்தத் தேர்வை பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் சுழற்சி முறையில் நடத்தி வருகின்றன. நடப்பாண்டில் இந்தத் தேர்வை நடத்தும் பொறுப்பு திருநெல்வேலி மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி கடந்த ஜூன் 7,8 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தொழில்நுட்பக் காரணங்களைக் காட்டி கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் 150 நாட்களுக்கும் மேலாகி விட்ட நிலையில், அத்தேர்வை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, இப்போது அத்தேர்வை நடத்தும் பொறுப்பையே ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்க விருப்பதாக தெரிவித்துள்ளது. இது அறிவார்ந்த முடிவல்ல.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் தகுதித் தேர்வை தமிழ்நாடு உயர்கல்வி மாமன்றத்தின் உறுப்பினர் & செயலாளர் கண்காணிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இ.ஆ.ப. அதிகாரி ஒருவர் தலைமையிலான அமைப்பால் நடத்தப்படும் தேர்வை இணைப் பேராசிரியர் நிலையிலான உறுப்பினர்& செயலாளர் கண்காணித்தால் அதில் தேவையற்ற சிக்கல்கலும், மோதலும் ஏற்படும். இவை எதுவும் தகுதித் தேர்வு நியாயமாகவும், சிறப்பாகவும் நடைபெறுவதற்கு எந்த வகையிலும் உதவி செய்யாது.
இவை அனைத்துக்கும் மேலாக, மாநிலத் தகுதித் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துவதற்கு பல்கலைக்கழக மானியக் குழு ஒப்புதல் அளிக்காது. எனவே, பயனற்ற முயற்சிகளில் ஈடுபடுவதை விடுத்து பல்கலைக்கழகங்கள் வாயிலாக மாநிலத் தகுதித் தேர்வை தமிழக அரசு நடத்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
