வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு சென்யார் என பெயரிடப்படும்: வானிலை மைய இயக்குநர் அமுதா பேட்டி

வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு சென்யார் என பெயரிடப்படும் என தென் மண்டல வானிலை மைய இயக்குநர் அமுதா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர்,
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
தென்கிழக்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலமான பிறகு அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுவடையக் கூடும். அரபிக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 3 சுழற்சிகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பில் இருப்பதால் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அந்தமான் கடற்பரப்பு, குமரி கடற்பரப்பில் உள்ள சுழற்சிகள் ஒன்றிணைந்து நகர்வதற்கு வாய்ப்பு உள்ளது.




