25 கலைஞர்களுக்கு 85 இலட்சம் ரூபாய்க்கான நிதியுதவி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் கீழ், 525 கலைஞர்களுக்கு 85 இலட்சம் ரூபாய்க்கான நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் 10 கலைஞர்களுக்கு பொற்கிழியாக தலா 1 இலட்சம் ரூபாய் நிதியுதவி,
தமிழில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க 5 நூலாசிரியர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் புதிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய 5 நாடகக் கலைஞர்களுக்கு தலா 1.50 இலட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் புதிய நாட்டிய நாடகங்களை தயாரித்து மேடையேற்றம் செய்ய 5 நாட்டியக் கலைஞர்களுக்கு தலா 1.50 இலட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் 500 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, என மொத்தம் 85 இலட்சம் ரூபாய்க்கான நிதியுதவிகளை 525 கலைஞர்களுக்கு வழங்கினார்.




