
சென்னை மாங்காடு அருகே 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சாப்ட்வேர் என்ஜினீயர் தஷ்வந்தை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. தமிழகத்தையே உலுக்கிய கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கீழமை நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட தஷ்வந்தை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கின் பின்னணியை பார்க்கலாம்.சென்னை மாங்காடு அடுத்த மவுலிவாக்கம் மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாபு – ஸ்ரீதேவி தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியின் மகள் ஹாசினி. 6 வயதான ஹாசினி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், திடீரென மாயமானாள். இதனால் பதறி துடித்த பெற்றோர் அருகில் உள்ள இடங்களில் தேடிப் பார்த்தனர். தொடர்ந்து போலீசிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில், அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் தஷ்வந்த் (வயது 24) என்பவர் ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது தெரியவந்தது. தமிழகத்தையே இந்த கொலை சம்பவம் உலுக்கியது.
புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து, குண்டர் சட்டத்தில் கைதானார். இந்த வழக்கிலிருந்தும் வெளியே வந்த தஷ்வந்த், கொடூரத்தின் உச்சமாக தனது தாயை கொன்றுவிட்டு தப்பி ஓடினார். மகனுக்கு ஜாமீன் கிடைத்ததால் மகிழ்ச்சியில் இருந்த தஷ்வந்தின் தந்தைக்கு, “இப்படி ஒரு தவறு செய்துவிட்டோமே” என கூனி குறுகும் அளவிற்கு கொடூரத்தை அரங்கேற்றினார் தஷ்வந்த்.
தஷ்வந்த் மீது சிறுமி வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு, தாய் கொலை என இரண்டு வழக்குகள் இருந்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தஷ்வந்துக்கு 2018ம் ஆண்டு மரண தண்டனையை விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையில், 2வது முறையாக ஜாமீனில் வெளியே வந்து தாயை கொலை செய்ததாக கைதான வழக்கில் தஷ்வந்த் விடுதலை ஆனார். தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டார்.
தமிழகத்தையே உலுக்கிய கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கீழமை நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர், மேல் முறையீட்டு வழக்கில் விடுதலையாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.