தமிழகம்

டெல்டா மாவட்டங்களில் 1.46 லட்சம் ஏக்கர் நெற்பயிரில் தேங்கிய மழைநீரை வடிய வைக்கும் பணி தீவிரம்..

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதால் பல்வேறு மாவட்டங்களில் மழைப்பொழிவு நின்றது. அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் கடந்த 2 நாட்களாக பெய்த மழை நேற்று நின்றது. தஞ்சை மாவட்டம் நல்லவன்னியன் குடிகாடு, ஒரத்தநாடு, சாலியமங்கலம், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாரான 5,000 ஏக்கர் குறுவை பயிர் சாய்ந்தது. திருவாரூர் மாவட்டத்தில் 10,000 ஏக்கர் குறுவை, மன்னார்குடி, வடுவூர், முத்துப்பேட்டை, கொரடாச்சேரி, திருவாரூர், காட்டூர் பகுதிகளில் 20,000 ஏக்கர் இளம் சம்பா பயிர்கள், திருத்துறைப்பூண்டி அடுத்த ஆண்டாங்கரை, கோமல், கீராலத்தூரில் 200 ஏக்கர் வயல்களில் குறுவை நெற்கதிர்கள் சாய்ந்து முளைக்க துவங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் 23 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்து தாளடி மற்றும் சம்பா வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதேபோல் 33,000 ஏக்கரில் சாகுபடி செய்த குறுவை நெற்பயிர்களில் 80 சதவீதம் அறுவடை முடிந்து விட்டது. மீதமுள்ள 20 சதவீத குறுவை பயிர்களில் மழைநீர் தேங்கியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் 500 ஏக்கர் குறுவை, கொள்ளிடம், குத்தாலம் பகுதிகளில் 10,000 ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது. நாகை மாவட்டத்தில் தலையாமழை, கீராந்தி, சின்னதும்பூர், பெரிய தும்பூர், சோழவித்தியாபுரம், கிராமத்துமேடு, கருங்கண்ணி உள்ளிட்ட இடங்களில் 1,000 ஏக்கர் குறுவை, கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம் போன்ற பகுதிகளில் 1 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் என மொத்தம் 1,46,500 ஏக்கரில் குறுவை, சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கின. டெல்டாவில் நேற்றிரவு முதல் மழை பொழிவு நின்றது. இன்று ஒரு சில இடங்களில் மேகமூட்டத்துடன் அவ்வப்போது வெயில் அடித்தது. இதனால் வயல்களில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மழையில் நனைந்த நெல் மூட்டைகளை காய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button