11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு பள்ளிக் கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக, “தமிழ்நாடு பள்ளிக் கல்விக் கொள்கை 2025” என்ற புதிய திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின்படி, மாணவர்களின் சுமையைக் குறைக்கும் மற்றும் அவர்கள் மேல்நிலைக் கல்விக்குத் தயாராவதைத் தீவிரப்படுத்தும் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, புதிய கல்விக் கொள்கை 2025-ன் கீழ், இனிமேல் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (12-ம் வகுப்பு) பொதுத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2017-18 கல்வி ஆண்டிற்கு முன்னர் இருந்த நடைமுறையே பின்பற்றப்படும்.

2025-2026 கல்வியாண்டு முதல், மேல்நிலைப் முதலாம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு இனிமேல் தனியாக நடத்தப்படாது.மேல்நிலை இரண்டாம் ஆண்டின் பொதுத் தேர்வில் மட்டுமே மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும். 11-ம் வகுப்பில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் இனிமேல் பொதுப் பட்டியலில் சேர்க்கப்படாது; ஆனால், அம்மாணவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும். இதுவரை 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுடன் சேர்த்து ஐந்து துணைத் தேர்வுகள் எழுத வாய்ப்பு வழங்கப்படும். 2030-ம் ஆண்டுக்கு மேல் இந்த துணைத் தேர்வுகள் நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் அல்லாமல் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வழங்கப்படும்




