மாதாக்கோட்டை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், மாதாக்கோட்டை மேம்பாலம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மாதாக்கோட்டை மேம்பாலம் அருகே தஞ்சாவூரிலிருந்து பனங்காடு சமயபுரம் கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் கேரளாவிலிருந்து நாகூருக்கு சுற்றுலா சென்றுகொண்டிருந்த இனோவா கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தஅறிவழகன் (வயது 37) பவியாஸ்ரீ (வயது 9) மற்றும் தேஜாஸ்ரீ (வயது 4) ஆகிய மூன்று நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உஷா (வயது 37) மற்றும் ரூபா (வயது 10) ஆகிய இருவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.