பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய வாட்ஸ்அப் குரூப்…ரயில்வே போலிஸ் அறிவிப்பு.

பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரெயில்களில் பயணிக்கும் பெண் பயணிகள் கொண்ட ஒரு வாட்ஸ் அப் குழுவை உருவாக்க தமிழக ரெயில்வே போலீசார் திட்டமிட்டுள்ளனர். பெண் பயணிகளுக்கு ரயிலில் ஏற்படும் இன்னல்களை தவிர்க்க இந்த, வாட்ஸ் அப் குழு பயன்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் விரைவான பயணம் மற்றும் பாதுகாப்பான பயணத்தை தேடி, பொதுமக்கள் ரயில்களை நாடி வருகின்றனர். ஆனால், அந்த ரயிலிலேயே பாதுகாப்பு இல்லாத சூழல் சமீபகாலமாகவே நடந்து வருவது கவலையையும், அதிர்ச்சியையும் தந்து கொண்டிருக்கிறது. அதிலும், சமீபத்தில், கோவையில் இருந்து திருப்பதி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில், கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடுமையை கண்டு தமிழகமே அதிர்ச்சியுற்றது.

இப்படி அடுத்தடுத்த சம்பவங்கள் ரயில்களில் பெண்களுக்கு ஏற்பட்டதையடுத்து, இரவு 10 மணிக்கு பிறகு புறப்படும் ரெயில்களில் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்..
ரயில்களில் குற்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கவும், ரயில்வே போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள். இதன்ஒரு பகுதியாக, மின்சார ரெயிலில் பயணிக்கும் பெண் பயணிகள், சிறு தொழிலில் ஈடுபடும் திண்பண்ட வியாபாரிகள், வேலை நிமித்தமாக தினமும் பயணிக்கும் பெண்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, பகுதி வாரியாக புதிய வாட்ஸ் அப் குழுவை தொடக்க ரெயில்வே போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பெண் பயணிகளுக்கு ஏற்படும் தொந்தரவு, செல்போன், செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய இந்த வாட்ஸ் அப் குழு பயன்படும் என்றும் ரெயில்வே போலீசார் தரப்பில் நம்பிக்கை பிறந்துள்ளது..