தமிழகம்

திருச்சியில் பிரம்மாண்டமாய் நடைபெறும் விடுதலை சிறுத்தைகளின் பேரணி .

திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற உள்ள மதசார்பின்மை பேரணியில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீது வானிலிருந்து பூக்களை தூவ ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது .

5 நிமிடங்கள் பூக்களை தூவுவதற்கான ஹெலிகாப்டர் வாடகையாக ரூ.9 லட்சம் செலவிடப்பட்டிருப்பது விவாத பொருளாக மாறி இருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அந்த வகையில் இன்று திருச்சியில் விசிக சார்பாக மதச்சார்பின்மை காப்போம் பேரணி நடக்கவுள்ளது. நாளை மாலை 4 மணியளவில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அருகே தொடங்கும் இந்த பேரணி மாநகராட்சி அலுவலகம் அருகில் முடிவடைய உள்ளது.இதில் விசிகவின் மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் இந்த பேரணிக்கான முன்னேற்பாடுகளை விசிக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் பேரணியில் கலந்து கொள்பவர்களுக்காக மருத்துவ குழு மற்றும் தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று நடக்கும் பேரணியில் வானில் இருந்து பூக்களை தூவுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக விசிக நிர்வாகிகள் தரப்பில் பிரத்யேக ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ரசீது வெளியாகி விசிகவினர் இடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவன் மீது வானில் இருந்து பூக்களை தூவி வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.

இதற்காக மட்டும் ரூ.9 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. 5 நிமிட நிகழ்ச்சிக்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட உள்ளது அக்கட்சியினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.

ஏற்கனவே திருமாவளவன் திருச்சியில் முகாமிட்டுள்ள நிலையில், இன்றைய பேரணியை வெற்றிகரமாக நடத்த ஆயத்தமாகி வருவதாக பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே திமுக கூட்டணியில் இருக்கும் விசிக மற்றும் சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள், அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று பேசி வருகின்றனர். அதில் முதல் நிலையில் இருப்பது விசிக தான். ஏனென்றால் நாடாளுமன்றத் தேர்தலின் போதே 2 தொகுதிகள் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட போது, அக்கட்சியினர் மத்தியில் பல்வேறு குரல்கள் எழுந்தன.இதனால் சட்டமன்றத் தேர்தலில் விசிக கடந்த முறையை போல் 6 தொகுதிகளை ஏற்காது என்று சொல்லப்படுகிறது.

அதேபோல் திருமாவளவன் தொகுதி பங்கீட்டில் அதிக பிடிவாதம் காட்டாமல் சூழலையும், களத்தையும் பொறுத்தே முடிவு எடுப்போம் என்று கூறி இருக்கிறார். இதனால் இன்று மாலை நடைபெற உள்ள பேரணி விசிகவுக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

எது எப்படி ஆயினும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறும் கூட்டணி தான் தமிழ்நாட்டில் 2026 ல் ஆட்சி அமைக்கும் என்று உறுதியிட்டு கூறுகிறார்கள் சிறுத்தைகள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button