பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி உயிரிழப்பு ..

பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இன்று சுகாதாரத் துறையால் குடற்புழு நீக்கும் பூச்சி மாத்திரை ( அல்பென்டசோல்) வழங்கப்பட்டிருக்கிறது. மாத்திரை சாப்பிட்ட கவி பாலா என்ற ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த நிலையில் மூக்கு மற்றும் வாய் வழியாக ரத்தம் கொப்பளித்து வடிந்துள்ளது. உடனடியாக ஆசிரியர் துரைசிங்கம் மற்றும் வீரமணி ஆகியோர் விரைந்து அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட மாணவி கவி பாலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவி கவி பாலாவின் தந்தை கண்ணன் மற்றும் தாய் பரிமளா ஆகியோர் கீழக்காடு சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் மாத்திரை சாப்பிட்டு லேசான மயக்கம் ஏற்பட்ட பத்தாம் வகுப்பு மாணவி தியா மற்றும் 11ஆம் வகுப்பு மாணவி சகாயம் மேரி ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு திரும்ப பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விட்டனர்.

சுகாதார துறையால் குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கப்பட்ட நிலையில் மாணவி உயிரிழந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவி உயிரிழந்தது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த மாணவியின் உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் அறிந்த பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், வருவாய்த் துறையினர் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
