ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசிப்பார் என்று நம்புகிறோம் – சபாநாயகர் அப்பாவு

எதிர்வரும் 2025ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 6ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, இந்த முறை ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசிப்பார் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்திருக்கிறார்.
“தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் 2025-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 6-ஆம் நாள், திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை-600 009, தலைமைச் செயலகம் சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும். அச்சமயம், தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றுவது மரபு. ஆளுநர் என்ன பேச வேண்டும் என்பது குறித்து மாநில அரசு எழுதி கொடுக்கும். இது உரை நிகழ்த்துவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னரே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். இப்படி அனுப்பப்பட்ட உரையில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்படும். இது குறித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசிக்கவில்லை. முதல் பக்கத்தையும், கடைசி பக்கத்தையும் மட்டுமே படித்தார். இந்த முறை அவர் உரையை முழுமையாக வாசிப்பார் என்று நம்புகிறோம்” என தெரிவித்திருக்கிறார். அப்பாவுவின் கருத்து சட்டப்பேரவை குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.
