தமிழகம்

“UPSC தேர்வில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயின்ற மாணவ, மாணவிகள் பலரும் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என்ற மூன்று நிலைகளை கொண்ட இந்த தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. 2025ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வு கடந்த மே 25ம் தேதி நடைபெற்றது. 979 பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வின் முடிவுகள் நேற்று(புதன்கிழமை) வெளியாகியுள்ளன. முதல்நிலைத் தேர்வில் 14,161 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 315 பேர் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2021ல் தமிழ்நாட்டில் 294 பேர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில் 2025ல் 700க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் பயின்ற மாணவ, மாணவிகள் பலரும் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,”தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியிலும் ‘நான் முதல்வன்’ திட்டத்திலும் பயின்ற நம் மாணவர்கள் யுபிஎஸ்சி முதனிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர்!முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றிமுகங்களை நேரில் காண ஆவலாய் இருக்கிறேன்.இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் பயிற்றுநர்களுக்கும் என் பாராட்டுகளை உரித்தாக்குகிறேன்! தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button