யூடியூபர் மாரிதாஸ் கைது..

பிரபல யூடியூபர் மாரிதாஸை சென்னையில் வைத்து சைபர் கிரைம் போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைத்து அவரை போலீசார் கைது செய்தனர்.கரூர் வேலுசாமி புரத்தில் கடந்த சனிக்கிழமை தவெக தலைவரும், நடிகருமான விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த வழக்கில் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் பிரபல யூடியூபர் மாரிதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார். நீதிமன்ற வழக்கில் திமுக எப்படி பிளான் போட்டு செயல்பட்டது? என்பது தொடர்பாக அவர் தனது கருத்தை பதிவிட்டு இருந்தார். அதோடு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழக்கும் நிலைக்கு திமுகவின் நாடகம் நடந்துள்ளது. உடனடியாக விஜய் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார். மேலும் அந்த பதிவில் திமுக ஒரு தீய சக்தி என்று கூறியிருந்தார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக நீதிமன்றத்தின் திமுக நடத்திய மொத்த நாடகத்தின் விவரம் வீடியோவாக இன்று வெளியிடப்படும் என்றும் அவர் இன்னொரு பதிவில் கூறியிருந்தார். அதன்பிறகு மாரிதாஸ் இன்று மதியம் 1.03 மணிக்கு போட்ட பதிவில், ‛‛என் இல்லத்துக்கு காவல்துறை கைது செய்ய வந்துள்ளது” என கூறியிருந்தார்.இந்நிலையில் தான் மாரிதாஸ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.