கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை – 7 தனிப்படைகள் அமைப்பு

கோவை விமான நிலையத்தின் பின்புறம் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரையைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர் கோவையில் ஒரு கல்லூரியில் தங்கி படித்து வருகிறார். விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் காரில் தனது ஆண் நண்பர் வினித்துடன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
அப்போது அந்த வழியாக வந்த மூவர், வினித்தை அரிவாளால் தாக்கி, அந்த பெண்ணை தூக்கிச் சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இளைஞர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த வினித் மயக்கமடைந்துவிட்டாராம். மயக்கம் தெளிந்ததும், தன்னுடன் இருந்த மாணவியை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதனிடையே கல்லூரி மாணவியை கடத்திச் சென்ற 3 பேரும் அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அது போல் வினித்தையும் வேறொரு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 3 பேரையும் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை விமான நிலைய பகுதியில் மாணவி ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




