விழுப்புரத்தில் 21 சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர்…

விழுப்புரம் வழுதரெட்டியில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம், 21 சமூகநீதி போராளிகளின் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். இன்று காலை மக்கள் படைசூழ வழுதரெட்டி பகுதிக்குச் சென்றார் முதல்வர் ஸ்டாலின். விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட வழுதரெட்டியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவரங்கம் மற்றும் சமூகநீதி போராளிகளின் மணிமண்டபத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். அண்ணா, கருணாநிதி அரசில் அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களின் பெருமையை நினைவுகூரும் வகையில் விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி கிராமத்தில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நடத்தப்பட்ட சாலை மறியல் போராட்டத்தின் போது அன்றைய ஆட்சியில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 21 தியாகிகளின் நினைவாக விழுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.
